பர்கூர் அருகே தடுப்பூசி போடப்பட்ட பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது



கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தடுப்பூசி போடப்பட்ட பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பர்கூர் அருகே உள்ள சக்கிலிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மனைவிகள். 2வது மனைவியான ரத்னாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு 2 நாட்களுக்கு முன்பு கப்பல்வாடி அரசுஆரம்ப சுகாதார மையத்தில் 2 தடுப்பூசிகள் போடப்பட்டன. பின்னர் ரத்னா வீட்டுக்குச் சென்றார். வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில் குழந்தைக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் வந்தால் கொடுக்க வேண்டும் என்று கூறி ஆரம்ப சுகாதார மையத்தில் மாத்திரைகள் கொடுத்திருந்தனர். அதை ரத்னா குழந்தைக்கு கொடுத்துள்ளார். ஆனால் உடனே பேதியாகி விட்டது.

இதையடுத்து குழந்தை உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக பர்கூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பின்னர் கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல கூறினர். அதன்படி குழந்தையை தூக்கிக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு பெற்றோர் ஓடினர். ஆனால் மருத்துவமனைக்குள் கொண்டு சென்றபோதே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. தடுப்பூசி காரணமாகத்தான் குழந்தை இறந்ததா அல்லது வேறு காரணமா என்பது குறித்து பரிசோதனையின் இறுதியில் தெரிய வரும்.

0 comments:

Post a Comment