படப்பை போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தை இறப்பு



ஸ்ரீபெரும்புதூர்:படப்பை அருகே, போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தை இறந்ததாக, வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலியோ சொட்டு மருந்தால் குழந்தை இறக்கவில்லை என, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் தெரிவித்தார்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார் நகரை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களின் இரண்டு வயது மகன் ஜோஸ்வா. நேற்று காலை 8 மணிக்கு அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.காலை 8.15 மணிக்கு தனலட்சுமி தனது மகன் ஜோஸ்வாவை அங்கு அழைத்து சென்றார். அங்கிருந்த ஊழியர்கள் ஜோஸ்வாவிற்கு சொட்டு மருந்து வழங்கினர். வீடு திரும்பிய தனலட்சுமி 8.45 மணிக்கு குழந்தைக்கு இரண்டு இட்லி ஊட்டியுள்ளார். 9 மணிக்கு தெருவில் விற்ற ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஐஸ்கிரீமை சாப்பிட்ட பின், குழந்தை தொட்டிலில் படுத்த உறங்கியது.கவிழ்ந்து படுத்திருந்த குழந்தையை நேராக படுக்க வைக்க, தனலட்சுமி தூக்கிய போது, குழந்தை மூச்சில்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.குழந்தையை பரிசோதித்த டாக்டர் அரை மணி நேரத்திற்கு முன்பு குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். குழந்தை இறந்த தகவல் படப்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ போல் பரவியது.இதையடுத்து, படப்பை, எழிச்சூர் ஆரம்ப சுகாதார மையங்களில் சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகள், தனியார் மருத்துவமனை மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 38 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவராசு, ஆர்.டி.ஓ., வீரப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ராஜசேகரன் கூறியதாவது: படப்பையில் இறந்த குழந்தை போலியோ மருந்தால் இறக்கவில்லை. குழந்தைக்கு இருதய நோய் இருந்திருக்கலாம். போலியோ சொட்டு மருந்து எந்த வகையிலும் மரணத்தை ஏற்படுத்தாது. குழந்தை இறந்ததற்கான காரணத்தை யூகிக்க முடியவில்லை. தூங்கும் போது குழந்தை தொட்டிலிலிருந்து கீழே விழுந்திருக்கலாம். சாப்பிட்ட உடனே குழந்தையை தூங்க வைத்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.இப்பகுதியில் தொடர்ந்து குழந்கைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க, ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெற்றோர் பயமில்லாமல் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடலாம்.இவ்வாறு ராஜசேகரன் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment