பீகார் - தட்டம்மை தடுப்பூசி : இரண்டு குழந்தைகள் மரணம்!

தட்டம்மை, ரூபெல்லா போன்றவைக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 தட்டம்மை தடுப்பூசி : இரண்டு குழந்தைகள் மரணம்!

பீகார் முஜாஃபர்பூர் மாவட்டத்தில் ஜப்பானிய மூளையழற்சி (JE), தட்டம்மை, ரூபெல்லா போன்றவைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளில் இருவர் நேற்று இறந்தனர்.
அதைத் தொடர்ந்து, முஜாஃபர்பூரில் இருந்து 39 கிமீ தொலைவில் உள்ள படோரி கிராமத்தில் தடுப்பூசி போடப்பட்ட 9 குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, முஜாஃபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆரை காவல் நிலைய அதிகாரி அமரேந்திரா குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 10 மணியளவில் சுகாதார ஊழியர்கள் (ANM) பிரமிளா குமாரி மற்றும் அங்கன்வாடி செவிகா பார்வதி குமாரி ஆகியோரால் 13 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாலை அதில் 11 குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 9 மாத குழந்தை ராஜா பாபு மற்றும் ஒன்றரை வயது குழந்தை சோனு குமார் இன்று இறந்தனர்.
அன்ஷு குமார் (1),தீபக் குமார் (9), ரோகித் குமார் (2), 5 மாத குழந்தை புனிதா குமாரி , 7 மாத குழந்தை நிஷா குமாரி,6 மாத குழந்தை குசும், 3 மாத குழந்தை மணீஷ் மற்றும் ஆயுஷ் (1) ஆகியோருக்கு ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஜி.கே. தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து படோரியில் முகாம் அமைத்துள்ள ஆரை முதன்மை சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் ஆர்.என். ஷர்மா, ‘முதன்மை சுகாதார மையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு ஐஸ் பெட்டியில் மருந்துகள் அனுப்பப்பட்டது. படோரி கிராமத்தில் உள்ள குழந்தைகள் எதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை விசாரிக்க வேண்டும். வேறு கிராமங்களில் இருந்து இதுபோல் எந்த புகார்களும் வரவில்லை’ என தெரிவித்துள்ளார்.
முஜாஃபர்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் தர்மேந்திர சிங், ‘ வழக்கமான தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக ஆரை, மீனாபூர், காந்தி மற்றும் ஜப்பானிய மூளையழற்சியால் பாதிக்கப்பட்ட வேறு சில பகுதிகளில் நோய்த்தடுப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த தடுப்பூசிகள் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிர்வகிக்கப்பட்டன. பொதுவாக இந்த தடுப்பூசிக்கு பிறகு காய்ச்சல் வருவது வழக்கமானது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாரசிட்டமால் மாத்திரை அளிக்கப்பட்டுள்ளது. இறந்த இரண்டு குழந்தைகளுக்கும் வாந்தி, வயிற்றுக்கு உள்ளிட்டவை நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியும்’ என தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய மூளையழற்சி கொசு கடிப்பதின் மூலம் ஏற்படுகிறது. முஜாஃபர்பூர் மாவட்டத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த நோயின் அறிகுறி தெரிய 5 முதல் 15 நாட்கள் ஆகும். காய்ச்சல் தலைவலி, வாந்தி, மயக்கம் மற்றும் உடல் இயக்க கோளாறு போன்றவை ஏற்படும்.
இந்த நோயால் முஜாஃபர்பூர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment