கரூர்: போலியோ சொட்டு மருந்து கொடுத்த குழந்தை பலி

 கரூர் அருகே போலியோ சொட்டு மருந்து கொடுத்த குழந்தை பரிதாபமாக இறந்தது. ஏற்கனவே, இதய நோய் இருந்ததால் தான் குழந்தை இறந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். கரூர் அருகே ஜெகதாபி, பால்வார்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (38). அவரது மனைவி சுமதி(32). அவர்களுக்கு மாயமூர்த்தி என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம், துளசிகொம்பு அரசு துவக்கப்பள்ளி முகாமில், மாயமூர்த்திக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. வீட்டுக்கு வந்த அரை மணி நேரத்தில், மாயமூர்த்தி மயக்கமானதால் சங்கர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தையை ஜெகதாபி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. போலியோ சொட்டு மருந்து கொடுத்த குழந்தை இறந்ததால் மருத்துவமனை முழுவதும் பரபரப்பானது.இதுகுறித்து ஆர்.எம்.ஓ., விஜயகுமார் கூறியதாவது: குழந்தைக்கு ஏற்கனவே, இதயநோய் உள்ளதால், நெஞ்சுக்கூடு வீக்கம் ஏற்பட்டிருந்தது. இந்நோய் பற்றி தெரிவிக்காமலேயே சொட்டு மருந்து கொடுத்தால்தான் குழந்தை பலியாகி விட்டது, என்றார்.

 

0 comments:

Post a Comment