சாணார்பட்டி - போலியோ சொட்டு மருந்து : திண்டுக்கல், தேனியில் குழந்தைகள் பலி?







சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, மற்றும் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயும் அருகே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை இறந்ததாக தகவல் பரவியது. ஆனால், இதனை டாக்டர்கள் மறுத்துள்ளனர். திண்டுக்கல் சாணார்பட்டி அருகே ஜக்கமநாயக்கன்பட்டியில் 62 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இளையராஜா, சித்திரைசெல்வியின் 11 மாத குழந்தை (மீனாள்) உயிரிழந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து வி.எஸ்.,கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் இறந்த குழந்தையை பரிசோதனை செய்தனர். பின், பால் புரையேறியதால் குழந்தை இறந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.


கலெக்டர் வெங்கடாசலம், சுகாதார துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது: போலியோ சொட்டு மருந்து கொடுத்து மூன்று மணி நேரத்திற்கு பின், தான் குழந்தை இறந்துள்ளது. சொட்டு மருந்து கொடுத்த ஒரு மணி நேரத்திற்கு பின், அந்த குழந்தைக்கு, அவரது தாய், பால் கொடுத்துள்ளார். அப்போது, அந்த குழந்தை வாந்தி எடுத்துள்ளது. பின், அந்த குழந்தையை தொட்டியில் இட்டு ஆட்டிய போது, பால் புரையேறி மூச்சுத்திணறி இறந்துள்ளது. குழந்தையை பரிசோதித்த டாக்டர்களும் அதை உறுதிசெய்துவிட்டனர். மேலும், அதே முகாமில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட மீதியுள்ள 61 குழந்தைகள் நலமாக உள்ளனர். இதனால், யாரும் பயப்பட தேவையில்லை, என்றனர். இது தொடர்பாக பெற்றோர் கருத்து கூற மறுத்துவிட்டனர்.
தேனி: தேவதானப்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சளார் கிராமத்தில், உள்ள அங்கன்வாடி மையத்தில், 85 குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அதில், சசிக்குமார் என்பவரது ஒன்றரை வயது மகன் தர்ஷித்பாண்டிக்கும், மகள் மது, இருவருக்கும் காலை 8 மணிக்கு, சொட்டு மருந்து கொடுத்துள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து, தர்ஷித் பாண்டி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக, குழந்தையை தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, பெற்றோர் கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், தர்ஷித்பாண்டி இறந்து விட்டதாக கூறினர். உடனடியாக, குழந்தையின் பெற்றோர், உறவினர்கள், "போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுத்ததால் தான் குழந்தை இறந்து விட்டது. மருந்து கொடுத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர். மேலும், குழந்தையை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டோம் என்றனர். இதனால், காலை 10 மணியில் இருந்து, பிற்பகல் ஒரு மணிவரை பிரச்னை ஏற்பட்டது. தேனி மாவட்ட, சுகாதார பணிகள் துணை இயக்குனர் காஞ்சனா, பெரியகுளம் டி.எஸ்.பி., சேது உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன் பிறகு, இறந்த தர்ஷித் பாண்டியை,தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். பெற்றோர் பீதி: இந்த தகவல், கிராமங்களில் பரவியதால், காலையில் சொட்டு மருந்து கொடுத்த, குழந்தைகளை தூக்கிக் கொண்டு, பெற்றோர் மீண்டும் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குவிந்தனர். குழந்தைகளை, டாக்டர்கள் சோதனை செய்து, எந்தவிதமான பாதிப்பும் இல்லை, என்று கூறியபிறகே, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
தேனி மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் காஞ்சனா கூறுகையில்,"போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுப்பதால், குழந்தைகள் இறப்பதில்லை. பிரேத பரிசோதனையில், சொட்டு மருந்து கொடுத்த பிறகு, குழந்தைக்கு பால், வடை கொடுத்துள்ளனர். இதில் குழந்தையின் நாசியில் ஏறி, மூச்சு குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இறந்ததாக முதல் கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது, என்றார்.

0 comments:

Post a Comment